சிவதொண்டராய், சிவ மங்கையராய் பணி ஆற்றுவோம்.

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் உலக சைவ இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று செந்தமிழ் திருக்கோவிலான இணுவில் ஞானலிங்கேச்சுரத்தில் இடம்பெற்றது.

யாழில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போது, இளைஞர், யுவதிகள் ஒன்று திரண்டு சிவதொண்டராய், சிவ மங்கையராய் பணி ஆற்றுவோம் என்று திடசங்கற்பம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வின்போது முதல் சிவத்தமிழ் குருமார், சிவதொண்டர்கள் கலந்து கொண்ட செந்தமிழ் விசேட யாகம், அபிஷேகம், திருமுறை வழிபாடு என்பன இடம்பெற்றது.

அகில இலங்கை சைவ மகா சபையின் அமைப்பாளர் வைத்திய கலாநிதி ப. நந்தகுமார் தலைமையில் தென் கயிலை குருமகா சந்நிதானமும், அகில இலங்கை சைவ மகா சபையின் பெருந்தலைவருமான அகத்தியர் மற்றும் அவரது சீடர் திருமூலர் தம்பிரான் ஆகியோர் முன்னிலையில் உலக சைவ இளைஞர் மாநாட்டின் தீர்மான உறுதியேற்பு வைபவம் நடைபெற்றது.

உலக சைவ இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் உள்ளிட்டோர் தமது வலக்கரத்தை தத்தம் நெஞ்சிலே வைத்து ஏகமனதாக உறுதியேற்றுக் கொண்டுள்ளனர்.

“சைவத் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் சைவ இளைஞர் மாநாட்டில் ‘தமிழ் எங்கள் மொழி’, ‘சைவம் எங்கள் வழி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற தீர்மானங்களாகிய பக்தி இயக்க மீளெழுச்சிக்கு உழைத்தல், கோவிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோவில்கள் போன்ற வாக்குகளுக்கமைய எமது காரியங்களில் செயலாற்றுதல்,

சைவத்தமிழ் கிராமங்களை எங்களால் இயன்றவரை ஆற்றுப்படுத்தல், எமது திருமுறைகளுக்கும், சைவ சித்தாந்த மெய்யியலுக்கும் எம்மால் இயன்றவரை தொண்டாற்றுதல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இறை சிவன் முன்னிலையில், எங்களுடைய ஆதீனங்களின் ஆசிர்வாதத்துடன் நாம் எமது வாழ்நாள் முழுவதும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துச் சிவதொண்டராய், சிவ மங்கையராய்ப் பணி ஆற்றுவோம்.

என்ற வாக்குறுதியை இன்றைய நன்னாளில் செந்தமிழ் திருக்கோயில் ஞானாம்பிகையுடனான ஞானலிங்கேச்சுரப் பெருமான் ஆலயத் திருமுன்றலில் உறுதியாக ஏற்கிறோம்” எனக் குறித்த உறுதியேற்பின் போது திடசங்கற்பம் பூணப்பட்டது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here