ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு சம்பந்தன் கடிதம்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களுக்கு ஜூலை 20ஆம் திகதி நான் கடிதம் எழுதியுள்ளேன்.

அதன் பிரதி இதனகம் இணைக்கப்பட்டுள்ளது. தங்களது செயலாளர் ஜூலை 28ஆம் திகதி அக்கடிதத்திற்குப் பதிலளித்துள்ளார். அதன் பிரதியும் இதனகம் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 09.08.2017 அன்று எனக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் பிரதியும் இதனகம் இணைக்கப்பட்டுள்ளது.

அவரது கடிதத்திற்கு 2017.08.11 ஆம் திகதியே கடிதம் மூலம் நான் பதிலளித்திருந்தேன். அதன் பிரதியும் இதனகம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தங்களது எண்ணப்பாட்டினை நான் நன்கறிவேன். மக்களுக்குக் காணிகளை வழங்குவது தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.

இவர்கள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்த மக்கள் தங்களது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். இவர்களது பிறப்புரிமை மறுக்கப்படலாகாது.

ஒருதசாப்த காலத்திற்கு மேலாக தங்களது காணிகளிலிருந்து இவர்கள் வெளியேறியுள்ளார்கள். ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ளன.

இந்தக் காணிகளை மீளத்தருமாறு வேண்டி, இந்த மக்கள் கடந்த 165 நாட்களாக மழையிலும் வெயிலிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

மிகுந்த மரியாதையுடன் நான் வேண்டிக்கொள்வதென்னவென்றால், கூடிய விரைவில் இந்தக் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தாங்கள் இது தொடர்பில் ஒருவழிகாட்டலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேவையேற்படின், தாங்கள் இது தொடர்பில் முடிவெடுக்கும் படியான ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறும் தயவாக வேண்டுகிறேன். இது தொடர்பில் விரைவான தீர்வொன்றினை நான் எதிர்பார்க்கிறேன். என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் குறித்த விடயம் தொடர்பில் தங்களது MOD/PAC/01/L/938/AY இலக்கமிடப்பட்ட 09.08.2017 திகதி யிடப்பட்டிருந்த கடிதம் நேற்று எனக்குக் கிடைத்தது. தங்கள் பதிலுக்கு எனது நன்றிகள்.

இந்த விடயம் பல்வேறு மட்டங்களில் அவதானத்திற்கு உள்ளாகி வந்துள்ளது, இறுதியாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் தலைமையில், புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை, 26 2017 அன்று ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஜூலை, 20 2017 அன்று நான் தங்களுக்கும் ஏனையோருக்கும் ஒரு பிரதியுடன் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் அனைத்தையும் உறுதி செய்கிறேன்.

எனது குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அவர்கள் 2017 ஜூலை 28ம் திகதி SP/4/1 இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் பதிலளித்திருந்தார்.

புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை 26ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த இடத்திலிருந்து இராணுவம் வெளியேறுவதற்குத் தேவையான நிதியினை தான் ஒரு சில நாட்களில் ஒதுக்கித் தருவதாக கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்தத் தீர்மானத்திற்கு அமைய வெளியேறும் நடவடிக்கையானது தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். தீர்வு எட்டப்பட வேண்டிய விடயமாக இருப்பது 70 ஏக்கர் 2ரூட் காணி விடயமே.

தங்களது 09.08.2017 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 73.11 ஏக்கர் காணியே இது என்பது எனது கணிப்பாகும். இந்தக் காணி தொடர்பில் ஜூலை 20, 2017 அன்று ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த விடயங்களை உறுதி செய்கிறேன்.

ஜனாதிபதியின் செயலாளரினால் ஜூலை 28ஆந் திகதி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் இந்த நிலைப்பாடு தொடர்பில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், வெளியேறுவது தொடர்பில் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரே விடயம் இந்த 70 ஏக்கர் 2ரூட் /73.11 ஏக்கர் காணிப் பகுதியேயாகும்.

இந்த மக்கள் சொந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன.

இந்த மக்கள் தமது காணிகளில் மீளக் குடியேறுவதை வலியுறுத்தி கடந்த 165 நாட்களாக இந்தக் காணிகளின் வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் போராட்டமானது மழையிலும் வெயிலிலுமாக மிகுந்த அவஸ்தைகளோடு இடம்பெற்று வருகின்றது.

மக்களின் அனுமதியின்றி இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் இடைவிடாத போராட்டங்களின் மத்தியிலும் சட்டரீதியாகப் பெறப்படாத இந்தக் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடிகொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது நிச்சயமாக சட்டஒழுங்குக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.

மேலும், இராணுவத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய போதியளவு அரச காணி குறித்த இடத்திலே காணப்படுகின்றது.

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் 2ரூட் /73.11 ஏக்கர் காணிகள் பெரும்பாலும் மக்களுக்கு உரித்தான, அவர்கள் வாழ்வதற்கும் ஏனைய சமூக, பொருளாதார தேவைகளுக்குமாக பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளாகும்.

தாங்கள் பிறந்து வளர்ந்த மண் தொடர்பில் அவர்களுக்கு உரித்து உண்டு. இந்த மக்களுக்கு அவர்களது இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையை இனிமேலும் மறுக்க முடியாது.

அப்படிச் செய்வது அநீதி மாத்திரமல்ல, அது நற்செயலுக்கும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பாதகமான செயற்பாடாக அமையும்.

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட் /73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விடயம் தங்களது மிக விரைவான கவனத்திற்குட்படுவதை நான் வரவேற்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here