வடக்கில் பொலிஸ் கெடுபிடிகள்! எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமா?

வடக்கு மாகாணத்தின் அரசியல் சூழலைப் போலவே, பாதுகாப் புச் சூழலும், பரபரப்பு மிக்கதாகவே மாறியிருக்கிறது.

துன்னாலை இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மாதம் மரணமான பின்னர், நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொக்குவில் வாள்வெட்டு மற்றும் சில வாள்வெட்டுச் சம்பவங்கள் என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குடாநாட்டின் பாதுகாப்புச் சூழலைக் கேள்விக்குறியாக்கியிருந்தன.

கொக்குவிலில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரைக் களமிறக்கிய பொலிஸ் மா அதிபர், தொடர் சுற்றிவளைப்புகள், சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டார்.

இதனால், துன்னாலைப் பகுதி மாத்திரம், இரண்டு மூன்று நாட்களுக்குள் நான்கு தடவைகளுக்கு மேல் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்து 42 பேர் கைது செய்யப்பட்டனர். அல்வாயில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதுபோல வலிகாமம் பிரதேசத்திலும் பல இடங்களில் தொடர் சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே வாள்வெட்டு மற்றும் அண்மைய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. வேறு பல குற்றங்களுக்காக தேடப்பட்டவர்களும், பொலிஸாரின் கண்காணிப்பு வளைத்துக்குள் இருந்தவர்களும் கூட இருந்தனர்.

கடந்த வாரத்தில் குடாநாட்டில் அதிரடிப்படையினரைக் களமிறக்கி மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களும், சுற்றிவளைப்புகளும், 2009ஆம் ஆண்டுக்கு முந்திய காலகட்டத்தை பலருக்கு நினைவுபடுத்தியிருக்கிறது.

விசேட அதிரடிப்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் வேறுபாட்டைக் கண்டறியத் தெரியாத பலரும், மீண்டும் இராணுவத்தினரே களமிறக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அச்சமடைந்திருக்கின்றனர்.

சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், அடை யாள அட்டை சோதனைகள், ஆள் அடையாளத்தை நிரூபிக்க முடியாதவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுதல் எல்லாமே, போர்க்காலத்தில் வடக்கு-, கிழக்கில் மாத்திரமன்றி கொழும்பிலும் கையாளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தான்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்று குறைந்திருந்தன. ஆனால், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுபோன்ற சூழலை மக்கள் எதிர்கொள்ளவில்லை என்றே கூறலாம்.

அவ்வாறானதொரு நிலையில், திடீரென இந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் தம் மீது திணிக்கப்படுவதை தமிழ் மக்கள் இலகுவான விடயமாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இது அவர்களை சிரமப்படுத்தி உளவியல் ரீதியாகவும் பௌதிக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்தடுத்து நிகழ்ந்த சில சம்பவங்களை அடுத்தே, பாதுகாப்பு இறுக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஒரு வகையில் இது தேவையான நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. அத்தகைய விம்பம் ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்மூடித்தனமான கைதுகளும், பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்புக் கெடுபிடிகளும், சிரமங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதானது,

தமிழ் மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களையும் கருத்துக்களையுமே ஏற்படுத்தக் கூடியன.வடக்கில் திடீரென பொலிஸ் தரப்பு. விசேட அதிரடிப்படையினரை களமிறக்கி சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போது ஆரம்பத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்துக் கொண்டிருந்தன.

அதற்கு வடக்கில் நிகழ்ந்த விரும்பத்தகாத சில வன்முறைச் சம்பவங்களும் காரணமாக இருந்தன. ஆனாலும், அதனைக் காரணம் காட்டி பொதுமக்களுக்கு எதிரான அல்லது அவர்களை துன்புறுத்துகின்ற வகையிலான செயற்பாடுகளுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

இரண்டு நாட்கள் கழித்தே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுற்றிவளைப்புகள் போன்ற மக்களை அசௌகரியப்படுத்துவதை நிறுத்தக் கோரி, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

ஆனாலும், வடக்கில் தொடர்ந்தும் சுற்றிளைப்புகள் தேடுதல்கள், கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இவர்களின் கடிதங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

வடக்கில் நடக்கின்ற கைதுகள் தனியே சில குறிப்பிட்ட தாக்குதல் சம்பவங்களை மட்டும் வைத்து இடம்பெறவில்லை. இதுதான் முதலாவதும் முக்கியமானதுமான பிரச்சினை.

வடக்கில், வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசங்கள் அவ்வப்போது உச்சக்கட்டத்தை எட்டுவதும் பின்னர் குறைவதும் வழக்கமானதாக மாறியிருந்தது.

வாள்வெட்டு போன்ற வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர் குழுக்களை பொலிஸார் அடக்குவதற்கு முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், விசேட அதிரடிப்படையினரை களமிறக்கும் அளவுக்கு நிலைமைகள் சென்றிருக்காது.

பொலிஸாரைப் பொறுத்தவரையில் வாள்வெட்டு போன்ற வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களை முற்றாக அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை.

நல்லூரில் பொலிஸார் ஒருவர் சுடப்பட்டதற்குப் பின்னரும், கொக்குவிலில் இரண்டு பொலிஸார் வெட்டப்பட்டதற்குப் பின்னரும் தான், வாள்வெட்டுக் குழுக்களை அடக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆனால் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் பலரும், இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இத்தகைய வாள்வெட்டுகள் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதை, பொலிஸ் பேச்சாளரின் தகவல் உறுதிப்படுத்துகிறது.

அவ்வாறாயின். இதுவரையில் இவர்கள் எப்படி பொலிஸாரிடம் சிக்காமல் இருந்தனர் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பொலிஸார் இலக்கு வைக்கப்பட்டவுடன் தான் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாதாரண பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்ட போது அதனை பொலிஸ் தரப்பு கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்பதும் இப்போது உறுதியாகியிருக்கிறது.

பொலிஸார் மீது கை வைக்கப்பட்டதும், தான் அவர்கள் விழித்துக் கொண்டு செயற்பட முனைந்திருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.

இது மாத்திரமன்றி, கொக்குவிலில், வடமராட்சி கிழக்கில், நல்லூரில் நடந்த சம்பவங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு இந்தக் கைதுகள் நடந்திருக்கவில்லை என்பதும் இந்த வாதத்தை வலுப்படுத்துகிறது.

அதைவிட நல்லூர், கொக்குவில் சம்பவங்களை அடுத்து பழைய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கூட கைது செய்ய முடிந்தது என்றால், அவர்கள் பற்றிய தகவல்கள் பொலிஸாரிடம் இருந்திருக்கின்றன.

ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்திருக்கின்றனர் என்று தான் உணர வைக்கிறது.ஆக, வடக்கில் இப்போது பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமைக்கு தனியே நல்லூர் , கொக்குவில் , துன்னாலையில் நடந்தது போன்ற சம்பவங்கள் மாத்திரம் காரணம் என்று கூற முடியாது.

அதற்கு அப்பால் சமூக விரோத செயற்பாடுகளை ஒடுக்குவதில் பொலிஸார் காண்பித்த மெத்தனப் போக்கும் கூட இதற்குக் காரணம் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

காலத்துக்குக் காலம் ஆவா குழு என்ற அடைமொழிக்குள் தோன்றிய வன்முறைக் குழுக்களை முறைப்படி ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துத் தேடுகின்ற நிலை ஏற்பட்டிருக்காது.

அது மாத்திரமன்றி, வடக்கில் நடந்த வன்முறைச் சம்பவங்களுடன் உடனடியாகவே முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி வந்த பொலிஸ் தரப்பு, இப்போது கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் போராளிகளும் இருக்கிறார்களா என்று சரியாகப் பதிலளிக்காமல் இழுத்தடிக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பியிருப்பதாகவும், அவர்களின் விசாரணைகளின் பின்னரே முன்னாள் போராளிகள் இருக்கிறார்களா என்று உறுதி செய்ய முடியும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியிருந்தார்.

வடக்கின் அண்மைய சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவையோ, திட்டமிட்டு இடம்பெற்றவையோ என்பது ஒரு புறத்தில் இருக்க, இந்தச் சம்பவங்களை வைத்து பொலிஸ் தரப்பும் அரசாங்கமும் திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன என்றே சந்தேகங்கள் எழுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில், அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குகின்ற நிலையிலும் அதுபற்றி அரசாங்கம் எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை.

ஏன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இந்த விடயத்தை இன்னும் கூடிய கரிசனையுடன் முன்னெடுத்திருக்க வேண்டும்.

கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்பங்களாலும் வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களாலும், இரண்டு தரப்பினருமே குழம்பிப் போயிருக்கின்ற நிலையில், வடக்கின் பாதுகாப்பு நிலை பற்றிய கரிசனைகள் அரசியல் மட்டத்தில் குறைந்து போயிருக்கிறது என்பதே உண்மை.

வடக்கில் உள்ள மக்களின் மீது பொலிஸாரோ, அதிரடிப்படையினரோ நெருக்கடிகளை ஏற்படுத்தும் போது, அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற வரலாற்றை பலரும் இப்போது மறந்து விட்டார்கள் போலவே தெரிகிறது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here