நல்லூர் சென்ற இளைஞர்கள் வழங்கிய தகவலால் யாழில் திருட்டு முறியடிப்பு

யாழ். ஏழாலை கிழக்கு இசிதோர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் திருடிச் செல்லப்பட்ட இரு பசு மாடுகள் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற இளைஞர்களின் நடவடிக்கையால் மீண்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று அதிகாலை கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ். ஏழாலை கிழக்கு இசிதோர் வீதியிலுள்ள இரு இடங்களில் வீடுகளுக்கு அருகில் கட்டப்பட்டிருந்த இரு பசு மாடுகள் திருடப்பட்டுள்ளன.

இதன்போது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை வேளையில் அங்கப் பிரதட்சணை செய்யச் செல்லும் இளைஞர்களால் ஏழாலை மத்தியிலுள்ள பகுதியில் பசு மாடுகள் சில கொண்டு செல்லப்படுவதாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்களின் தகவலுக்கமைய பசு மாட்டின் உரிமையாளரும், உறவினர்கள் சிலரும் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்த போது, திருடர்களின் பிடியிலிருந்து குறித்த பசு மாடு தப்பித்து அங்குள்ள வீதியில் நின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

திருடிச் செல்லப்பட்ட நிலையில் மீண்டும் மீட்கப்பட்ட குறித்த இரு பசு மாடுகளினதும் மொத்தப் பெறுமதி ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஏழாலைப் பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்துள்ளதாகக் குறித்த பகுதிப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் கடந்த சில தினங்களாக ஏழாலை கிழக்குப் பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தாம் இரவு வேளைகளில் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ள சூழ்நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தொடரும் திருட்டுக்களைக் கட்டுப்படுத்தி நிம்மதியாக வாழச் சுன்னாகம் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here