கொலைகள் ஊடாக ஆட்சியைத் தொடர அரசு திட்டம்

கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளதாக மஹிந்த அணி எம்.பி. ரோஹித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசு இரண்டு வருடங்களை வீணாகக் கழித்து விட்டது. மீதி வருடங்களையாவது நல்லமுறையில் கழிக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

அமைச்சரவை மாற்றம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த மாற்றத்தோடு நல்ல நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் சில பொறுப்புகள் மாற்றப்பட்டதோடு சரி. எதுவும் நடக்கவில்லை. அந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்பு தான் நாட்டின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். எவராலும் இதைச் சகிக்க முடியாது. பொருளாதாரம் விழுந்து விட்டது. அரச சொத்துகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. நாடு ஓரிடத்தில் ஸ்தம்பித்து நிற்கின்றது.

முன்னோக்கி நகர முடியவில்லை. தேர்தல்களை நடத்துவதற்கும் அரசால் முடியவில்லை. தோல்விப் பயமே இதற்குக் காரணம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது. அடுத்து மாகாண சபைத் தேர்தல்களும் ஒரே தினத்தில் நடத்துவதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் இந்த வருடம் செப்டெம்பரில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அசாதாரண நிலைமையை இந்த அரசு இப்போது உருவாக்குகின்றது. கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளது. இதன் விளைவுகளை நாம் விரைவில் அனுபவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here