ஜனாதிபதியை நேரில் சந்திக்க கூட்டமைப்பு முயற்சி! காலம் கடத்தும் மைத்திரி

புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்து வருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

இதற்காக அவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கட்சி கேட்டுள்ளது. எனினும், இதுவரை சந்திப்புக்கு நேரம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நாம் ஏற்கனவே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம்.

இன்னும் கிடைக்கவில்லை. வடக்கில் ஏற்பட்ட அமைதியின்மை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அந்தச் சந்திப்பில் பேச எண்ணியுள்ளோம்.

அதேசமயத்தில் அரசமைப்பு உருவாக்கத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் வழமைக்கு மாறான நிலைமை தொடர்பில் பேசுவதற்கு நேரம் வழங்குமாறு கோரியிருந்தோம். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம். அப்போது இந்த விடயத்தை இறுக்கமாக அவரிடம் எடுத்துரைப்போம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டும் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியாத நிலையே இருக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது யோசனையை முன்வைக்காததால் அது தாமதமடைகின்றது. இந்தச் சிக்கலை அடுத்தே இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here