சட்டமா அதிபரை காப்பாற்ற முன்னிலையாகும் மைத்திரி

சட்டமா அதிபர் திணைக்களம் விசேட வழக்குகளை தொடர்ந்தும் தாமதப்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் குற்றம் சுமத்தப்படுவதன் காரணமாக திணைக்களம் மக்கள் மத்தியில் ஏளனத்திற்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் உடனடியாக தலையிடாது போனால், எதிர்காலத்தில் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும் என அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி, சட்டமா அதிபர் திணைக்களத்தை அவமானப்படுத்துவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இப்படியான கரும்புள்ளி ஏற்படுவதுரு பாரதூரமான நிலைமையாகும் எனவும் ஜனாதிபதி, அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான தப்புல டி லிவேரா, யசந்த கோதாகொட போன்ற சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்தும் விமர்சித்து வந்தனர்.

பிணை முறிப்பத்திர ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை நடத்திய விதம் தொடர்பில் தப்புல டி லிவேரா மற்றும் திணைக்களத்தின் விசேட வழக்குகள் சம்பந்தமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை யசந்த கோதாகொட தொடர்ந்தும் தாமதம் செய்து வருவது குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் நடந்த நிதி மோசடிகள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அனுப்பியிருந்த அறிக்கைகளில் 17 அறிக்கைகள் சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தொடர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here