தமிழக அரசின் 7 லட்சம் நிதியுதவியை பெற அனிதா குடும்பம் மறுப்பு!

அரியலூர் அனிதா தற்கொலையை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

சிறு வயது முதல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு வலம் வந்த அரியலூர் அனிதா பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.

எனினும் நீட் தேர்வில் சோபிக்க முடியாததால் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். நீதி கிடைக்காததால் அவர் தனது உயிரை கடந்த வெள்ளிக்கிழமை மாய்த்து கொண்டார்.

இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

நேற்று அந்த மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.7 லட்சத்துக்கான வரைவோலையை எடுத்து கொண்டு ஆட்சியர் லட்சுமி ப்ரியா குழுமூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

அங்கு அனிதாவின் குடும்பத்தினரிடம் நிதியுதவியை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் அனிதாவின் உறவினர்கள் அந்த நிதியுதவியை வாங்க மறுத்து விட்டனர்.

வரைவோலையை பெற்று கொள்ளுமாறு அனிதா உறவினர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் வாங்கவில்லை.

நீட் விவகாரத்தில் சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்சியரிடம் அனிதா சகோதரர் மணிரத்னம் கோரிக்கை வைத்தார்.

நல்ல முடிவை அரசு அறிவித்த பின்னர் இந்த நிதியுதவியை பெற்று கொள்வதாகவும், தனது தங்கைக்கு ஏற்பட்ட நிலை பிற மாணவர்களுக்கு ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here