மீண்டும் மோதிக்கொண்ட நாமலும் விஜயகலாவும்! தொடரும் பதிவுகள்

கடந்த சில நாட்களாக விஜயகலா மற்றும் நாமலின் டுவிட்டர் பதிவுகள் குறித்து அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ் குமாரை காப்பாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்ததாக தெரிவித்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில்,

“புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தான் காப்பாற்றியதாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.” என ஒரு கருத்தையும்,

“சிறுவர் விவகார அமைச்சரே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. உடனடியாக பதவி விலகி, விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.” என 2 கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்து விஜயகலாவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

“உங்களது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைகின்றது. நீங்கள் முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு டுவிட்டரில் பதிவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் சட்டத்தின்படி பொது மக்களின் வன்முறைகளையே தடுத்து நிறுத்தினேன். இலங்கையின் சட்டம் ஒரு சிலருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கக்கூடாது” என பதில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் இருவரும் டுவிட்டரில் மோதிக்கொண்டுள்ளார்கள். விஜயகலாவின் பதில் கருத்துக்கு இன்று நாமல் மேலும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “இங்கே சட்டத்தைப்பற்றி பேசவில்லை, உங்கள் ஒரு நண்பரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பொது மக்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த காரணத்தினால் நீங்கள் உங்களுடைய பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதையே நான் கேட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு இராஜாங்க அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் ஒரு சட்டத்தரணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், டுவிட்டர் போன்ற ஊடகங்கள் வழியாக சட்டத்தை மீறி வதந்திகளை எழுதியிருக்கக்கூடாது.” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக இருக்கும் விஜயகலா மகேஸ்வரனும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் டுவிட்டர் தளத்தில் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்துக்களை பதிவிடுவது குறித்து பலரும் விமர்சனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here