முட்டை அப்பத்தில் சிக்கிய மைத்திரி! ராஜதந்திர ரீதியாக பிரபலமானது எப்படி?

இலங்கையின் அரசியல் நகர்வுகளில் முட்டை அப்பம் முக்கிய பங்கு வகித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றின் மூலம் உறுதியாகி உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று பொரளையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி ‘முட்டை அப்பம்’ கதையைக் கூறி பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தினார்.

நேற்று நடைபெற்ற மாநாட்டின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முட்டை அப்பம் கதையை நினைவுபடுத்தினார். “முன்னாள் அரசிலிருந்து வெளியேறிய பின்னர் முட்டை அப்பம் கதை கூறி எனக்கு எதிராக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

நான் முட்டை அப்பம் சாப்பிட்ட தினம் இரவுக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தலுக்கு செல்வோமா? என முன்னாள் ஆட்சியாளர் கேட்டார். எல்லாத் தலைவர்களும் ஊமையாகவே இருந்தனர்.

அப்போதைய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். மாற்றம் தேவையென்ற நிலைப்பாட்டில் இருந்தனர். கடன் சுமையும் அதிகரித்திருந்தது.

சர்வதேச நெருக்கடியும் வலுவடைந்திருந்தது. இவை உள்ளிட்ட காரணங்களாலேயே கடந்த ஆட்சியிலிருந்து வெளியேறினேன் என மைத்திரி குறிப்பிட்டார்.

முட்டை அப்பத்துடன் தான் எப்படி தொடர்புபடுத்தப்பட்டார் என்று சிரித்தபடியே ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்போது மேடையில் பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையிலிருந்து 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி வெளியேறிய மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராகக் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தார்.

கட்சிக்குள் இருந்து கொண்டே தனக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்று மைத்திரி மீது மஹிந்த விமர்சனம் முன்வைத்ததுடன், முதல் நாள் இரவு (2014ஆம் ஆண்டு நவம்பர் 20) என்னுடன் இணைந்து முட்டை அப்பம் சாப்பிட்டார். இன்று வெளியேறி விட்டார்’ எனவும் வசை பாடினார்.

இலங்கை அரசியல் களத்தில் முட்டை அப்பம் விவகாரம் சூடுபிடித்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் இராஜதந்திரி நிசா பிஸ்வால் இலங்கை வந்திருந்தபோது அவருக்கு அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முட்டை அப்பம் வழங்கினார்.

அதை உண்ட பின்னர் ‘சுவையான உணவு’ என்று நிசா பிஸ்வால் ருவிட்டரில் பதிவிட்டிருந்தார். இலங்கையின் முட்டை அப்பம் இராஜதந்திரம் என்று வர்ணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here