அதிபருக்கெதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருவப்பங்கேணியில் உள்ள பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபருக்கு எதிராக  கண்டன  ஆர்ப்பாட்டம் நேற்று  முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வருடம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டார்  என்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கல்லூரி அதிபர்  ஒத்துழைப்பு வழங்கினார் என்ற காரணத்தில் அப்பகுதி மக்களால்  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவம் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும், அதிபரும் வலய கல்வி பணிப்பாளரினால்  இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதின் பின்  இக்கல்லூரிக்கு புதிய அதிபராக சாந்தகுமார் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட  அதிபர் சபேஷ்வரன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீண்டும் கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாடசாலை மாணவர்கள், மாணவர்களது பெற்றோர்கள், கிராம அபிவிருத்தி சங்கு உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் இணைந்து இன்று கல்லூரிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

ஆர்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,

“தற்போது பாடசாலை கல்வி நிர்வாகம் சீராக செயல்படுகின்ற நிலையில் மீண்டும் இவ்வாறன அதிபர்கள் கல்லூரிக்கு வருவதனால் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கபடுவதோடு,  மாணவர்களின் மனநிலையும் பாதிப்புக்குள்ளாகும்  எனவே இவ்வாறான அதிபர்கள் இக்கல்லூரிக்கு வருவதை பெற்றோர்களாகிய நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்க போதில்லை” என தெரிவித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  கல்லூரிக்கு முன்பாக  முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுள் மாணவர்கள் பெருவாரியினர் என்பதாலும் சிறிது நேரத்தில் தாமாக கழைந்து சென்றதாலும் பொலிஸார் எதுவித சட்டநடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here