“சாரதியின் மொழி உரிமையை போக்குவரத்து பொலிஸார் மீற முடியாது”

“போக்குவரத்து விதியினை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார்  குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும், அவரது மொழி உரிமையை மீற முடியாது” என இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா  வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸார்  ஒருவரால் தனக்கு புரியாத சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாக தெரிவித்தும் வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த  அன்ரூ பிரசன்னோ என்ற இளைஞர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலத்தில்  கடந்த ஜனவரி மாதம்  முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு  தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவால் விசாரணை மேற்கொண்ட பின்னர் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முறைப்பாட்டாளரால் 19.01.2017 அன்று இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணையானது கடந்த 27.06.2017 அன்று எமது காரியாலயத்தில் இடம்பெற்றது,

குறித்த விசாரணைக்கு அமைய தங்களது பிரிவின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தரால் முறைப்பாட்டாளருக்கு 10.01.2017 அன்று வழங்கப்பட்ட 561428 இலக்க போக்குவரத்து குற்றத்திற்காக வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தில் சிங்கள மொழியினால் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எப்படியிருப்பினும் முறைப்பாட்டாளருக்கு சிங்கள மொழி தெரியாததினால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஆணைக்குழு அவதானித்துள்ளது.

தமிழ் மொழி மட்டும் தெரிந்த பொதுமகனிற்கு சிங்கள மொழியில் தண்டப் பணச் சீட்டினையோ அல்லது சிங்கள மொழியிலான தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதோ பிழையான நடைமுறை என்பதுடன், இச்செயற்பாடு பொதுமகன் ஒருவரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய மொழி உரிமையை மீறும் செயலாகும்.

எனவே எதிர்காலத்தில் அதிகாரிகள் போக்குவரத்து குற்றங்களுக்கு வழங்கும் சீட்டுக்களினை பொதுமக்களுக்கு விளங்கும் மொழியில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், குறித்த மொழியிலான சேவையினை வழங்குவதற்கு அரச திணைக்களமானது கடப்பாடு கொண்டுள்ளது என்பதையும் இந்த ஆணைக்குழு தெரிவித்துக் கொள்கிறது,

குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை பற்றிய அறிக்கையை அனுப்பி வைக்குமாறும், இவ்விடயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் தேவைப்படுத்தப்படுகின்றது” எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here