நல்லூர் பெருந்திருவிழாவில் யாழ் மாநகரசபைக்கு கிடைத்த வருமானம்..

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஒரு கோடியே முப்பத்தியேழு இலட்சத்து நாற்பத்திமூவாயிரத்து நூற்றியறுபத்துமூன்று ரூபா (13743163) இலாபமாகக் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி,

2017 ஆம் ஆண்டு நல்லூர் பெருந்திருவிழாக் காலத்தில் கடைகள், விளம்பரப் பதாகை, சித்த மருந்து விற்பனை, சஞ்சிகை விற்பனை, சேதன உர விற்பனை, நன்கொடை ஆகியவற்றின் மூலம் மாநகர சபைக்கு 20,580,880.94 மொத்த வருமானமாகக் கிடைத்துள்ளது.

வழங்குப் பொருட்கள், பயன்பாட்டுச் செலவுகளுக்காக கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட மொத்தமாக 68 இலட்சத்து 37 ஆயிரத்து 717 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. செலவிலும் கூடிய இலாபமாக ஒரு கோடியே 37 இலட்சத்து 43ஆயிரத்து 163 ரூபா கிடைத்துள்ளது.

உற்சவத்தின் போது வெளிவீதி கண்காணிப்பிற்காக 1,360,092 ரூபாவுக்குச் சி. சி.ரீ. வி கமரா கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் 1,290,205.41 ஆள் வருமானம் அதிகரித்துக் காணப்படுகின்றது

இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 6.7 வீதம் அதிகரித்துள்ளது.செலவானது 719,599.15 ரூபாவால் குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 9.5 வீதத்தால் செலவு குறைவடைந்துள்ளது.

இதன்போது கிடைக்கப் பெற்ற இலாபம் யாழ்ப்பாண நகர அபிவிருத்திக்கும், மற்றும் பல சேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெருந்திருவிழாக் காலத்தில் ஆலய வளாகத்தில் கச்சான் விற்பனை செய்தவர்களிடமிருந்தும் இலட்சக்கணக்கில் வரியாக அறவிடப்பட்டிருந்ததாக வியாபாரிகள் அங்கலாய்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here