திங்களன்று தொடங்குகிறது ஜெனிவா கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பாக கலந்துகொள்ளவுள்ளனர்.

திங்கட்கிழமை முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் உரையாற்றவுள்ளனர்.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.

எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கை தமது நேர உரைகளின்போது இலங்கை குறித்து கேள்வியெழுப்பும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது ஜெனிவா அமர்வுகளின்போது பொதுவான விவாதங்களின்போது பல்வேறு தலைப்புக்களின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் வலியுறுத்தல்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இலங்கை குறித்து வலியுறுத்தல்களை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் பல்வேறு உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா வளாகத்தில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கையிலிருந்து சில பொது அமைப்புக்கள் இம்முறை ஜெனிவாவுக்கு விஜயம் செய்து இவ்வாறான உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் தொடர்பில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா. வின் விசேட குழுவானது ஒரு நீண்ட அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்திருக்கிறது.

மேலும் இம்முறைக் கூட்டத் தொடரில் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஐ.நா.வின் விசேட செயற்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும்போது இலங்கை தொடர்பான ஒருசில விடயங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here