முன்னாள் போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்படவில்லை!

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்படவில்லையென வடமாகாணத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வடமாகாணசபையின் 105ஆவது அமர்வில், முன்னாள் சுகாதார அமைச்சர் தன்னால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக உரையாற்றினார்.

இதன்போது, முன்னாள் போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மாகாணசபை உறுப்பினர் தவநாதன் குற்றம் சாட்டியமைக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், போரின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது வடமாகாணசபையிலும் முன்வைக்கப்பட்டது.

இதன்பின்னர், எனது அமைச்சின்கீழ் மருத்துவ நிபுணர் குழுவொன்றை அமைத்தேன். இதன்பின்னர், ஐந்து மாவட்டங்களிலுமுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இவ்வறிவித்தலை ஊடகங்களூடாக விடுத்திருந்தோம். அத்துடன் விண்ணப்பங்களும் அனுப்பி வைத்தோம்.

இதன்பின்னர் 300 வரையான முன்னாள் போராளிகள் விண்ணப்பித்திருந்தனர். குறித்த 300 முன்னாள் போராளிகளுக்கும் எமது மருத்துவர்களால் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்பட்டதற்கான எந்தவித அடிப்படைக் காரணிகளும் பரிசோதனையூடாக நிரூபிக்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

இதில் சில முன்னாள் பேராளிகள் மருத்துவப் பரிசோதனையைப் பெற மறுத்துள்ளனர். அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. எனவே சுகாதார அமைச்சின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here