தமிழ் மண்ணுக்காக வீழ்ந்தவர்களுக்கு சிங்கள மண்ணில் நினைவுத் தூபி.

போரில் உயி­ரி­ழந்­த­வர்­கள் அனை­வ­ருக்­கு­மாக ஒரு பொது நினை­வுத் தூபியை அனு­ரா­த­பு­ரத்­தில் அமைக்­க­லாம் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­தன முன்வைத்த யோசனை தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் முன்வைத்த கருத்துக்களினை இங்கே தருகின்றோம்,

தமிழர்களுக்கான பாரம்பரிய நினைவுகூரல் நிகழ்வாக நாம் கடந்த காலத்தில் சரியான முறையில் மன ஆறுதலுக்கு ஏற்றவாறு வருடா வருடம் மேற்கொண்டு வந்துள்ளோம். தாயகப் பிரதேசத்தை மீட்பதற்காகவும் எமது மக்களின் விடிவுக்காகவும் போராடிய எமது உறவுகளை விதைத்த நினைவாலயங்கள் அனைத்தும் யுத்தத்தின் போது இராணுவத்தினால் அழிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களை நினைவு கூருவது தொடர்பாக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து ஒரு ஜனநாயகத்துக்கு முரனான கருத்தாக உள்ளது. ஜனநாயக உரிமை மீறப்பட்டதாகவே நாம் இதை பார்க்கிறோம்.

எமக்காக உயிர் நீத்த எமது மாவீரர்களையும் எமது உறவுகளையும் நாம் நினைவு கூருவதற்கான இடத்தையும் நேரத்தையும் சிங்கள அரசு முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லை. நாம் எமது உறவுகளை நினைவுகூரும் இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டன. அத்துடன் மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூருவதற்கென பொதுவான நினைவு தினமும் எமக்கென உள்ளது.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில், முள்ளியவளை, ஆலங்குளம், வன்னிவேளாங்குளம் ஆகிய துயிலுமில்லங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எல்லாங்குளம், வரணி, கோப்பாய் , உடுத்துறை, சாட்டி ஆகிய துயிலுமில்லங்களும் வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லமும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முளங்காவில் துயிலுமில்லங்களும் மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான், ஆக்காட்டிவெளி ஆகிய துயிலுமில்லங்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் துயிலுமில்லமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, வாகரை ஆகிய துயிலுமில்லங்களும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றில் இராணுவம் தற்போது பாரிய முகம்களை அமைத்துள்ளது. ஏனையவை அழிக்கப்பட்டுள்ளன.

யுத்தத்துக்கு பின்னர் மாவீரர்கள் பொதுமக்கள் ஆகியோரை விதைத்த இடங்களான பச்சப்புல்மோட்டை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்கள் தற்போது துயிலுமில்லங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மாவீரர்கள் நாளை அனுஸ்டிப்பதற்கு நவம்பர் 27 ஆம் திகதியும், போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூருவதற்கு மே 18 ஆம் திகதியும் எம்மவருக்கான நினைவு நாளாக உள்ளது. அதை பொதுமக்கள் வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகிறோம்.

போரில் இறந்தவர்களை நினைவுகூருவது என்பது வெறுமனே ஆத்ம சாந்திக்கு மட்டுமல்லாது எமது தலைமுறையினர் எமது போராட்ட வரலாறுகளை மறக்கக்கூடாது என்பதற்கும் உலக நாடுகள் அனைத்திலும் எமது இனம் அழிக்கப்பட்ட உண்மையை தெரியப்படுத்துவதற்காகவுமே நாம் மேற்கொண்டு வருகிறோம். எமது இனத்துக்காக போராடிய வரலற்றினை தலைமுறை தலைமுறையாக நினைவு படுத்தும் ஒரு தினமாகவே நாம் இதை பார்க்கிறோம்.

வீழ்த்தப்பட்டவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் தான் நினைவு கூரப்பட வேண்டும் அதுவே ஆத்ம திருப்தியளிக்கும். அதை விடுத்து அரசு தெரிவிப்பது போல் பொதுவான ஒரு இடம் அமைத்து அங்கு போய் நினைவு கூருங்கள் என்றால் அது நினைவு நாளை அனுஸ்டிப்பதையும் இறந்தவர்களை இழிவுபடுத்தும் செயலாகவே இருக்கும் என்பதுடன் கேலிக்கூத்தாகவே அமையும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நல்லெண்ணத்தை கட்டியெழுப்பவுள்ளதாக அரசு தெரிவித்து, எமது உறவுகள் விதைக்கப்பட்ட இடத்தில் ஏறி நின்று நல்லிணக்கம் ஏற்படுத்த முயற்சிப்பது என்பது பொய்ப் பேச்சு. வீழ்த்தப்பட்டவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் நினைவு கூரப்படுவதே இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கும்.

நல்லிணக்கம் என்பது இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூரும் செயற்பாட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை. இவ்வாறான கேலிக்கூத்து செயற்பாடுகளை மேற்கொள்ள நினைக்கும் அரசு, நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கும் என்ற சந்தேகமே எம்மத்தியில் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here