விக்னேஸ்வரனுக்கு எதிரான மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை?

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியினராலேயே முதலமைச்சருக்கு எதிராக இரண்டாவது தடவையாகவும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான வட மாகாண முன்னாள் அமைச்சர்களான குருகுலராஜா, டெனீஸ்வரன், மற்றும் மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோருக்கு எதிராக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அகற்றுமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கோரிக்கை விடுத்தனர்.

வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களால் முன்னர் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான சுரேஷ் பிரேச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல் எப் , செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, தர்மலிங்கம் சித்தாரித்தன் தலைமையிலான புளோட் ஆகியன கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமழ் தேசிய மக்கள் முன்னணி, வி.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி மாத்திரமன்றி பொது அமைப்புக்கள், இளைஞர்கள் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் முதலமைச்சருக்கு ஆதரவாக வீதிகளில் இறக்கிப் போராடினார்.

இந்த எதிர்ப்புகளை அடுத்து வேறு வழியின்றி இலங்கை தமிழரசுக் கட்சி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெற்றுக்கொண்டதுடன், ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு எதிராக அவர் சுதந்திரமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியது.

இதற்கமைய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்பட்டிருந்த அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து அந்த பதவிகளுக்கு புதிததாக அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்திருந்தார்.

இந்த நிலையிலேயே வட மாகாண சபையின் ஆளும் கட்சியான இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணைந்து மீண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் முதலமைச்சருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமாயின் மீண்டும் தோற்கடிக்கப்படும் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

வட மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இருப்பதாக தெரிவிக்கும் சிவாஜிலிங்கம், முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் இடமளிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here